Showing posts with label சுகி. Show all posts
Showing posts with label சுகி. Show all posts

Sunday, 31 August 2014

Modern ayurveda - 1

In one of the very first introductory sessions one of our lecturer warmly welcomed ‘welcome to the museum..whatever you read, learn is all history, which has very minimal relevance to your life and future’ I was shocked. What am I doing here?

And all these years we have been taught the atmosphere is composed of carbon, oxygen, nitrogen and hydrogen. Human body consists of 206 bones, there is blood, lymph, muscles, brain, spine, heart, lungs in it.  That’s what science is all about, that’s how we have been taught. Suddenly you are being told that this universe or prapancham is composed of 5 mahabhutas. And you have thri doshas, 7 dhatus in your body. I was bewildered, confused.

Saturday, 25 January 2014

ரசாயனமும் முதுமை மருத்துவமும் - 2

வயோதிக பிரச்சனைகளுக்கு ஆயுர்வேதம் எவ்வாறு உதவும் எனும் கோணத்தில் சென்ற பதிவில் எழுதியிருந்ததன் நீட்சி தான் இந்த பதிவு. முன்னரே குறிப்பிட்டது போல் வயோதிகத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான முயற்சி இளமையில் இருந்தே தொடங்க வேண்டும். பஞ்ச கர்ம சிகிச்சைகளை செய்துகொண்டு தோஷங்களை அவ்வப்போது வெளியேற்றி, உணவு பழக்கங்களை உரிய முறையில் வரையறை செய்துக்கொண்டு உடலை பேணுவது முக்கியம். சரகர் சொல்கிறார், “சர்வம் அன்யேத் பரித்யஜ்ய சரீரம் அனுபாலயேத்” – எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு உடலை பேணுவதற்கு நாம்  முக்கியத்துவம் அளித்தாக வேண்டும். 

Sunday, 29 December 2013

ரசாயனமும் முதுமை மருத்துவமும்


காலம் வழிந்தோடி தீர்ந்து மறையும் தருணத்தில் நம் முன் வந்து நிற்பவன் தான் காலன். வாழ்வின் அத்தனை மகத்துவங்களும் ஒரு நாள் முடிவுர வேண்டும். அறிய முடியாத வாழ்வின் அடுத்த பக்கமாக வரும் மரணத்தை மனிதன் என்றேனும் வாசித்து தான் ஆக வேண்டும், இயற்கையுடன் போரிட்டு மரணத்தை வெல்வதல்ல ஆயுர்வேதத்தின் நோக்கம். வாழும் காலத்தில் வீடுபேறு நோக்கி முன்னகர்ந்து ஆன்மாவின் அழியா தன்மையை உணர்ந்து அறிவதே அதன் நோக்கம். தர்ம அர்த்த காம மோக்ஷம் எனும் நான்கு புருஷார்தங்களை அடைவதற்கு ஆரோக்கியம் அவசியம் என்கிறார் சரகர்.அதற்கு தேவையான ஆரோக்கியத்தை பேணும் வழிமுறைகளை சொல்வதே ஆயுர்வேதத்தின் நோக்கம் என்கிறார். முதிர்ந்த வயதில் பலவீனமான உடலை உகுத்து வேறோர் உடலில் புகுந்து ஜனன மரண சுழலில் உழல்கிறது நம் ஆன்மா என்கிறது கீதை. பசி, நீர் வேட்கை, தூக்கம், வயோதிகம் ஆகியவை மனிதன் தவிர்க்க முடியாத பிணி என்கிறது ஆயுர்வேதம். 

Friday, 29 November 2013

ஷாலக்கியம் - 2

சென்ற பதிவில் ஷாலக்கிய பிரிவின் முக்கியத்துவத்தை பற்றி எழுதியதன் தொடர்ச்சியே இந்த பதிவில் இடம்பெறுகிறது. ஷாலக்கிய பிரிவின் முக்கியமான மருத்துவர் என்று ஜனகரையும் நிமியையும் போற்றுகிறது ஆயுர்வேதம். நிமி எனும் அரசன் ஜனகனின் குலத்தில் அவனுக்கு முன்னரே தோன்றியவன். நிமி உடலை விட்டு கண்ணிமையில் புகுந்து கொண்டார். தேகம் இல்லாதவன் என்பதே விதேஹம் என்று ஆனது. விதேக தேசம் அப்படி உருவானது தான். விதேக தேசத்து பெண் என்பதால் சீதைக்கு வைதேகி என்றொரு பெயர் உண்டு. கண்ணிமையில் உள்ள நிமியின் காரணமாகவே கண் சிமிட்ட முடிகிறது என்றொரு தொன்மம் உண்டு. அப்படி சிமிட்டும் செயலை தான்  நிமிஷா என்றழைக்கிறோம்.  அதுவே மருவி நிமிடம் என்றாகிவிட்டது. 

Monday, 18 November 2013

ஷாலக்கியம் - 1

அஷ்டாங்க ஆயுர்வேதத்தின் (ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகள்) மற்றுமொரு மிக முக்கியமான பிரிவு ஷாலக்கியம். ஷாலக்கியம் எனும் பிரிவு கழுத்து பகுதிக்கு மேலுள்ள உறுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவாகும். கண், காது, மூக்கு, பல், வாய், தொண்டை, தலை என கழுத்துக்கு மேலுள்ள உறுப்புகள் அனைத்தையும் உள்ளடக்கியது. எண் ஜான் உடலிற்கு சிரசே பிரதானம் என ஒரு வழக்கு புழங்குவதை நாம் அறிவோம். சிரஸ் ஒரு வர்ம ஸ்தானம் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. 

Monday, 28 October 2013

குமார தந்திரம் - 1


மறுக்க முடியாமல் நாம் அனைவரும் திரும்ப செல்ல நினைக்கும் பிராயம் என்பது பாலிய பிராயமாகத்தான் இருக்கும்.எத்தனை ஆனந்தங்கள் ,துள்ளல்கள் ? என்றும் அதிலேயே வாழ்த்திட மாட்டோமா என்று ஏக்கம் பிறக்கிறது. குழந்தையாய் இருந்த பொழுது வாழ்வில் வண்ணங்களும், குறுகுறுப்பும் நிறைந்த நாட்கள் போயி, வாழ்வே சுவைத்து சப்பிய பப்புல் கம் போல சுவையின்றி நிறமின்றி வெளிறி உமிழ முடியாமல் சிக்கி தவிக்கும் நாட்களாய் மாற்றம் கொள்வது ஏனோ? எந்த மனதிற்கும் குழந்தையை பார்த்தால், வாழ்தலில் ஒரு பிடிப்பும், அழகும், ஆசையும் பிறந்து மனம் உற்சாகம் அடைகிறது. அதே ஒரு வீட்டில் அந்த குழந்தைக்கு உடல் சுகமில்லை என்றால் வீடே வெயிலில் வாடிய ரோஜா இதழ் போல் வதங்கி சுருங்கி விடுகிறது, எல்லோர் மனத்திலும் ஒரு பயம் கவிகிறது.

Thursday, 17 October 2013

மனம் - 2


மனிதர்களின் ஆளுமைகளை பலவாறாக வகுத்து விளக்குகிறது நவீன உளவியல். ஆயுர்வேதத்தில் சத்வ காயம், ராஜச காயம், தாமச காயம் என மூன்று குணங்களை ஒட்டி ஆளுமை கூறுகளை விளக்குகிறது. பெரும்பாலான ஆளுமை கோளாறுகள் உருவாவதற்கான வாய்ப்புகள் (personality disorders) இளம் வயதிலேயே தீர்மானிக்கப் படுகிறது. ஆழ்மன ஏக்கங்களும் துக்கங்களும் மேலெழும் தருணங்களில் அவர்கள் முற்றிலும் வேறு மனிதர்களாக ஆகிவிடுகின்றனர். பேய் பிடிப்பது போன்றவைகளை நாம் இப்படித்தான் புரிந்துகொள்ள முடியும். இதை ஒருவகையான வடிகால் என்றும் பார்க்கலாம். ஆகவே அவர்களின் தீர்ப்பதற்கு சாத்தியமான ஏக்கங்களை சமன் செய்வதன் மூலம் அந்த பிளவுபட்ட ஆளுமையின் தேவையை நாம் இல்லாமல் ஆக்குகிறோம். படையல்களை அப்படி புரிந்துகொள்ளலாம். ஆபத்தானவர்களை தனிமைபடுத்துவது (பிறர் நன்மையை கருத்தில் கொண்டு) எனும் பழக்கம் அன்று முதல் இன்று வரை தொடர்கிறது. இத்தகு வியாதிகளில் கையாளப்படும் வன்முறை சார்ந்த வழிமுறைகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. ஏற்புடையதும் அல்ல.எனினும் நவீன உளவியல் மனதின் ஒரு சித்திரத்தை அளிக்கிறது என்றால் ஆயுர்வேதம் அதே மனதை மாற்று கோணங்களில் அணுகுகிறது. மன சிக்கல்களுக்கு வெறும் மயக்க மருந்துகள் மட்டுமே தீர்வு அல்ல என்பதையும் நாம் கணக்கில் கொண்டாக வேண்டும்.

Thursday, 3 October 2013

மனம்

மனம் ஆயுர்வேதத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அறிதலுக்கு உதவும் ஞானேந்திரியமாகவும், செயலாற்றும் கர்மேந்திரியமாகவும் அது அறியப்படுகிறது. ஆகவே ஐந்து ஞான இந்திரியங்கள், ஐந்து கர்ம இந்திரியங்களை தவிர்த்து பதினோராவது உபய இந்திரியமாக மனம் முன்வைக்கப்படுகிறது. மனதிற்கும் உடலிற்குமான தொடர்பை ஆயுர்வேதம் தெளிவாகவே வரையறுக்கிறது. இன்று psycho- somatic disorders என்று அறியப்படும் கருதுகோள் பற்றிய புரிதல் ஆயுர்வேதத்தில் என்றும் இருப்பது தான். மன நோய் என்று தனியாக பிரித்து பார்க்காமல், உடலில் உள்ள ஒவ்வொரு நோயை பற்றி விளக்கும் போதும் அதன் காரணமாக மனம் சார்ந்த ஏதோ ஒன்று தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். தோல் நோய்கள், வாத நோய்கள், மேக நோய்கள், சுவாச நோய்கள் என பல நோய்களை பற்றிய அத்தியாயங்களில் நாம் இதை காணலாம். 
thanks
- 

Tuesday, 24 September 2013

ரச சாத்திரம் - ஓர் எளிய அறிமுகம்


கனிமங்களையும், உலோகங்களையும் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் பிரிவை ரச சாத்திரம் என அழைக்கின்றனர். அறுவை சிகிச்சை வலுவாக பழகபட்ட காலத்தில் இந்தியா முழுவதும் பௌத்தமும் சமணமும் செல்வாக்குடன் பரவியது. அதை ஒட்டி , அறுவை சிகிச்சை ஒரு விதமான ஹிம்சை எனும் நம்பிக்கை ஏற்பட்டது, ஆகவே அதற்கு மாற்றாக, அதை காட்டிலும் விரைவாக செயலாற்றும் ஓர் மருத்துவ முறைக்கான தேடல் ரச சாத்திரத்தில் வந்து நின்றது.

Tuesday, 17 September 2013

உணவே மருந்து - ஒரு அறிமுக குறிப்பு

கொஞ்ச காலத்திற்கு முன்னர் புத்தக அறிமுகத்திற்காக நடத்தப்படும் ஆம்னிபஸ் தளத்தில் ஆசான் மகாதேவன் எழுதிய நூல் குறித்து எழுதிய அறிமுககட்டுரை 

-----
ஆயுர்வேத மாணவனாக அன்றுதான் நான் என் முதல் கருத்தரங்கில் அமர்கிறேன், ஆக்ஸிஜென், கார்பன் ஹைட்ரஜன் என்று அதுவரை அறிந்தவர்கள் வெளியேறி வாயு, அக்னி, கபம்  என  புதிய குணச்சித்திரங்கள் அறிமுகமான தருணம். குழப்பங்களும் கேள்விகளும் நிறைந்த வேறோர் உலகத்தில் திசை தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். பொறியியல் படித்திருக்க வேண்டும் , நாம் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்று குழம்பித் திரிந்த நாட்கள் அதைத் தொடர்ந்தன (இன்றும் அவ்வப்போது அந்த எண்ணம் குறுக்கிடுகின்றது என்பது வேறு விஷயம்). மீண்டும் மீண்டும், அடுத்தடுத்து, மேடையேறி புத்தகங்களில் உள்ளதை ஆசைதீர வாந்தியெடுத்த பேச்சாளர்களை பார்த்தபோது கிட்டத்தட்ட என் சந்தேகம் உறுதி செய்யப்பட்டது, இது நம் வாழ்விற்கு பயனளிக்கப் போவதில்லை, ஆயுர்வேத கல்லூரி செத்த கல்லூரிதான், நான் வாசிப்பது அறிவியல் பாடம் அல்ல இன்றைக்குப் பயன்படாத வரலாறுதான் என்று நினைத்துக் கொண்டேன். 


Wednesday, 11 September 2013

அக்னி

வாத, பித்த, கபம் ஆகியவைகள் முக்குற்றம் அல்லது திரிதோஷம் என்று அழைக்கப்படுவதுப் போல், வியர்வை (ஸ்வேதம்). மலம் மற்றும் மூத்திரம் மூன்று கழிவுகள் என்று கருதப்படுகின்றன. தோஷங்கள் கூட கழிவுகளாகவே சொல்லப்படுகிறது. நாம் உட்கொள்ளும் ஆகாரம் எப்படி செரிமானம் ஆகிறது என்பதைப் பற்றி ஆயுர்வேதம் விரிவாக விளக்குகிறது. ரசம், ரக்தம், மாம்ச, மேதஸ், மஜ்ஜா. அஸ்தி மற்றும் சுக்கிரம் என ஏழு தாதுக்கள் நம் உடலில் உள்ளன.


Tuesday, 3 September 2013

தொடக்கமும் ஒடுக்கமும்

மெய்யியல் சிந்தனை முறைமைகளில் இந்தியத்தன்மை என்று ஏதும் உண்டா? சுழற்சி, முடிவிலி, பன்மையை ஏற்றுகொள்வது, ஒன்றே பலவாக பரினமிப்பது - போன்ற  கருத்துக்களை இந்தியத்தன்மையுடன் பொருத்திக் கொள்ளலாம். ஆயுர்வேதத்தைப் பற்றி சொல்லும் போது தொடக்கமும் ஒடுக்கமும் இல்லாத அழிவற்ற அறிவு என்று சரகர் குறிப்பிடுகிறார். இது வழமையாக நம் மரபில் எல்லாவற்றைப் பற்றியும் சொல்லப்படுவது தான் என்பதாலோ என்னவோ அதைப்பற்றி அதிகம் யாரும் அலட்டிக்கொள்வதில்லை.


ஆயுர்வேதத்தை மாற்று கோணங்களில்  அணுகும் ஒரு நூலை உருவாக்க வேண்டும் எனும் யோசனை சில மாதங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது எனக்கு, அதன் ஒரு பகுதியாக ஆயுர்வேத நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ள தொன்மக் கதைகளை தொகுக்கத் தொடங்கினேன். தொன்மங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப் பட்டுள்ளன? அவைகளுக்குள் ஏதேனும் பொதுத்தன்மை இருக்கிறதா? குறியீட்டு ரீதியாக பொருள் விளக்கிக் கொள்ள இயலுமா போன்ற கேள்விகளை மனதில் கொண்டு இத்தேடலில் இறங்கினேன்.