Friday, 29 November 2013

ஷாலக்கியம் - 2

சென்ற பதிவில் ஷாலக்கிய பிரிவின் முக்கியத்துவத்தை பற்றி எழுதியதன் தொடர்ச்சியே இந்த பதிவில் இடம்பெறுகிறது. ஷாலக்கிய பிரிவின் முக்கியமான மருத்துவர் என்று ஜனகரையும் நிமியையும் போற்றுகிறது ஆயுர்வேதம். நிமி எனும் அரசன் ஜனகனின் குலத்தில் அவனுக்கு முன்னரே தோன்றியவன். நிமி உடலை விட்டு கண்ணிமையில் புகுந்து கொண்டார். தேகம் இல்லாதவன் என்பதே விதேஹம் என்று ஆனது. விதேக தேசம் அப்படி உருவானது தான். விதேக தேசத்து பெண் என்பதால் சீதைக்கு வைதேகி என்றொரு பெயர் உண்டு. கண்ணிமையில் உள்ள நிமியின் காரணமாகவே கண் சிமிட்ட முடிகிறது என்றொரு தொன்மம் உண்டு. அப்படி சிமிட்டும் செயலை தான்  நிமிஷா என்றழைக்கிறோம்.  அதுவே மருவி நிமிடம் என்றாகிவிட்டது. 




சென்ற பதிவில் கண் , பல், போன்ற பாகங்களில் ஏற்படும் நோய்கள் குறித்தும் அவைகளின் தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொண்டை, காது, தலை, மூக்கு போன்றவைகளில் ஏற்படும் நோய்களை விரிவாக இம்முறை  விவாதிக்கலாம். பொதுவாக ஒவ்வாமையால் அடுக்கு தும்மல் ஏற்பட்டு அவதிப்படுவார்கள். அவர்களுக்கு மூக்கில் உள்ள தண்டு வளைந்து விடும் இதை deviated nasal septum என்று அழைப்பார்கள். அறுவை சிகிச்சை மூலம் இதை சரி செய்ய இயலும். எனினும் அறுவை சிகிச்சை அத்தியாவசியம் இல்லை. ஒவ்வாமையை கட்டுப்படுத்த முயன்றால் போதும். ஹரித்ரா காண்டம் போன்ற மருந்துகள் ஒவ்வாமையை கட்டுப்படுத்துவதில் சால சிறந்தது. வியோஷாதி வடகம், தாலீசாதி வடகம் போன்றவையும் நல்ல பலன் தரும். ஒவ்வாமையுடன் சேர்ந்தோ அல்லது தனித்தோ சைனசைடிஸ் தொந்திரவு ஏற்படலாம். தலைவலி தலைபாரம் மூக்கடைப்பு ஆகியவை ஏற்படும். அங்கிருந்து கிருமி தொற்று தொண்டைக்கு , காதுக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உண்டு. 

மூக்கு சிரசின் வாயில் என்றொரு சொல்வழக்கு ஆயுர்வேதத்தில் உண்டு. மூக்கில் மருந்து விடும் வைத்தியமுறைக்கு நசியம் என்று பெயர். நசியத்தில் பல வகை உண்டு. சூரனங்களை கொண்டும் . மூலிகை சாறுகளை கொண்டும், மூலிகை எண்ணெய்களை கொண்டும் செய்யலாம். மூக்கில் ஏற்படும் கட்டிகளுக்கு ( polyps) குப்பைமேனி இல்லை சாறு பயனளிக்கும். எனினும் பொதுவாக அதிகம் பயன்படுத்துவது எண்ணெய்களை தான். சைனஸ் தொந்தரவுகளுக்கு ஷட் பிந்து தைலம் அபாரமான பலனளிக்கும். அணு தைலமும் பயன்படுத்தலாம். அனு தைலத்தை இரண்டு இரண்டு சொட்டுக்கள் தினமும் இரண்டு மூக்கு துளைகள் வழியாகவும் விட்டுகொள்வது ஆயுர்வேத தினசர்யாவின் ஒரு பகுதியாக தொடர்ந்து வருவது அனைத்துவிதமான தலை மற்றும் கழுத்து நோய்களுக்கு பலனளிக்கும். க்ஷிரபலா 101 தைலத்தை வாத ரோகங்களுக்கு பயன்படுத்தலாம். கழுத்து எலும்பு தேய்மான பிரச்சனைகளுக்கு மகாராஜா பிரசாரணி தைலத்தை நசியமாக பயன்படுத்தலாம். முக வாதத்திற்கு கார்பாச அஸ்தியாதி மெழுகு பாக எண்ணெய்யை நசியமாக பயன்படுத்தலாம். ஷாலக்கிய ரோகங்களுக்கு பொதுவில் நசியமே மிக சிறந்த சிகிச்சை.

காதுவலிக்கு பல காரணங்கள் உண்டு. கிருமி தொற்று இருக்கும் பொது  காதுக்குள் எண்ணெய் விடுவது உசிதமல்ல. காதுக்குள் இளம் சூடாக எண்ணெய் விட்டு கொஞ்ச நேரம் கழித்து துடைத்து எடுத்துவிட வேண்டும். கர்னபூரணம் என சொல்லப்படும் இந்த சிகிச்சை நல்ல பயனளிக்கும். வசா லஷுனாதி தைலம், கர்ண பூரண தைலம், வில்வாதி தைலம் ஆகியவை காதுவலிக்கு நல்ல பயனளிக்கும். கிருமி தொற்று ஏற்பட்டு வலியெடுக்கும் சமயங்களில் குக்குலு- சாம்பிராணி புகையை காதில் செலுத்துவது (தூபனம்) நல்ல பயனளிக்கும். யோகராஜா குக்குலு போன்ற மாத்திரைகளை பொடித்து சாம்பிராணியுடன் , கொஞ்சம் மஞ்சள் பொடியையும் கலந்து கனலில் போட்டு தூபனம் செய்யலாம்.    

டான்சிலைடிஸ் நோய்க்கு சுதர்சன மாத்திரை, சுப்ர வடி போன்றவை உதவும். பூண்டு சாரை தேனுடன் கலந்து இளம் சூடுடன் டான்சில் மீது சுத்தமான பஞ்சை கொண்டு வைத்து வந்தால் வலியும் வளர்ச்சியும் கட்டுப்படும். தொடர்ந்து சுடு தண்ணீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பதும் நன்மை பயக்கும். 

ஷாலக்கிய பிரிவு மேலும் பல உட்பிரிவுகளை கொண்டது. கண்ணுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கும் சிறப்பு ஆயுர்வேத மருத்துவர்களை நாம் கேரளத்தில் காண முடியும். நவீன நோயறியும் முறைகளை கொண்டு மேலும் பல நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஆயுர்வேதம் உதவும்.
-சுகி