எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் அவருடைய மேற்கத்திய மருத்துவம் பற்றிய தனது கட்டுரையில் இரண்டு விஷயங்களை தெளிவாக முன்வைக்கிறார், நவீன மருத்துவம் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கு ஆற்றிய முக்கியமான பங்களிப்பு மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் போலி பிரச்சாரங்கள். அதன் அளவில் இவை இரண்டுமே மறுக்க இயலாத உண்மைகள். இதையொட்டி இந்திய மருத்துவம் இன்றைய சூழலில் சந்தித்துவரும் சிக்கல்களை பற்றி ஆராய்வது அவசியமாகும்.
மருத்துவ அறிவியலும் தொழில்முறை மருத்துவமும் முற்றிலுமாக பிளவுண்டு கிடக்கின்றன. நவீன அறிவியலின் மொழியில் ஆயுர்வேதம் சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகள் உரையாடவேண்டியது காலத்தின் கட்டாயம். மருத்துவ வணிகத்தில் உள்ள அறமின்மை பிரம்மாண்டமான சிக்கல்களை ஏற்படுத்தி வரும் சூழலில் மக்கள் மாற்று மருத்துவம் நோக்கி நகர்கிறார்கள். புற்று நோய் தொடங்கி எய்ட்ஸ் வரை அனைத்து நோய்களுக்கும் தங்களிடம் தீர்வு உள்ளதாக பிரகடனப்படுத்தும் பாரம்பரிய மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவத்தின் பெயரால் புழங்கி வரும் போலிகளின் விளம்பரங்களுக்கு சாமானியர்கள் பலியாகிறார்கள். உண்மையில் பாரம்பரிய மருந்துகள் பக்க விளைவுகள் அற்றவையா? என்றால் முழுவதுமாக ஆமாம் என்று சொல்லிவிட இயலாது. அனைத்து நோய்களுக்கும் தீர்வு உள்ளதா? எனில் இல்லையென்றே சொல்ல வேண்டும். எல்லா மருத்துவமுறைகளுக்குமே சிகிச்சையில் சில எல்லைகள் உண்டு. போலி மருத்துவர்களின் போலி பிரச்சாரங்களுக்கும், விபரீதமான நடத்தைகளுக்கும் பாரம்பரிய மருத்துவத்தை ஒட்டுமொத்தமாக பழிக்க இயலாது என்றே நம்புகிறேன்.
பதினெட்டாம் நூற்றாண்டுவரை உயிர்த்திருந்த அறிவு தொடர்ச்சியை காலனியம் இல்லாமல் ஆக்கியது. இரு நூற்றாண்டு தேக்க நிலைக்கு பின்னர் மக்களின் நம்பிக்கையையும், அரசின் நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது. சில உதிரி முயற்சிகளை தவிர்த்து மிக முக்கியமான அறிவு தள உரையாடல் எதுவும் சாத்தியமாகவில்லை. உண்மையில் ஆயுர்வேதம் தன்னை காலந்தோறும் புதுப்பித்தே வந்திருக்கிறது, அது ஊடாடிய பண்பாடுகளில் இருந்து தனக்கு தேவையானவற்றை பெற்றுக்கொண்டும், அவசியமற்றவையை விட்டுவிட்டும் முன்னகர்ந்திருக்கிறது. சரக சம்ஹிதை தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டின் பைசஜ்ய ரத்னாவளி வரை அந்த தொடர்ச்சியை காணலாம். காலந்தோறும் புதிய மூலிகைகளை தனது பட்டியலில் இணைத்துகொண்டுள்ளது.
அடிப்படையில் ஆயுர்வேத செவ்வியல் ஆக்கங்களை தொகை நூல்களாக பார்க்கவும் இடமுண்டு. சர என்றால் நடப்பது சரகர் என்ற பெயர் வர காரணமே அவர் எங்கெங்கோ அலைந்துதிரிந்த பலவற்றையும் பதிவு செய்த நாடோடி என்பதால் இருக்கக்கூடும். சுசுருதர் என்றால் துல்லியமாக கேட்கும் திறன் உடையவர், எவரோ சொன்னவற்றை கேட்டு பதிவு செய்தவர் என்று பொருள் கொள்ளலாம். இந்திய நிலபரப்பெங்கும் புழங்கிய கணக்கற்ற நாட்டு வைத்திய முறைகளில் இருந்து சிலவற்றை தங்கள் ஆக்கங்களில் தொகுத்திருக்கிறார்கள். சிலவற்றை தேர்ந்தெடுக்கவும் பலவற்றை நிராகரிக்கவும் அவர்கள் மட்டத்தில் கள ஆய்வும், அனுபவ அறிவும், ஆயுர்வேத அடிப்படை கொள்கைகளுக்கு உட்பட்ட தர்க்க ஒத்திசைவும் பின்புலமாக இருந்திருக்க வேண்டும். ஆக அடிப்படையில் ஆயுர்வேதம் இறுகிய கட்டமைப்பு கொண்டதல்ல, அதன் அடிப்படை சித்தாந்தம் பலவற்றையும் தனதாக்கி கொள்ளும் நெகிழ்வு தன்மை கொண்டது. ஆகவே நவீன அறிவியலுக்கு முரணான இயங்குவிதிகள் கொண்டவை என ஆயுர்வேதத்தை புறந்தள்ளிவிட இயலாது.
ஏற்றுகொள்வதும் நிராகரிப்பதும் அடுத்த விஷயம், ஆனால் இந்த மண்ணில் இத்தனை நூற்றாண்டுகளாக நோய்களுக்கு எதிராக போராடவும், நோய்களை தடுக்கவும் ஒரு வழிமுறை கண்டறியப்பட்டு பின்பற்றப்படுகிறது எனும் வரலாற்று பிரக்ஞை பின் காலனிய இந்தியாவில் வாழும் நவீன மருத்துவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது? பரிசீலனை இன்றி புறந்தள்ளிட காரணமென்ன? நவீன மருத்துவம் பாரம்பரிய மருத்துவத்தை மோசடியாகவும் அன்னியமாகவும் பார்க்கிறது. பாரம்பரிய மருத்துவமும் நவீன அறிவியலையும் மருத்துவத்தையும் தங்களை அழிக்க நினைக்கும் சக்தியாக பார்க்கிறது. ஒன்றையொன்று விரோத பாவத்துடன் அணுகுவதை விடுத்து மக்களுக்கான மருத்துவத்தை முன்னெடுத்து செல்வதில் கைகோர்த்து செல்ல வேண்டும். அதுவே மருத்துவம் எவரோ சிலரின் அதிகாரமாக தொடராமல், மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும்.
இந்தியாவில் ஆயுஷ் அமைப்பிற்கு ஆராய்ச்சிக்காக ஓரளவிற்கு நிதி வழங்கப்படுகிறது, ஆனால் அதைக்கொண்டு உருப்படியான ஆய்வுகளை பெரும்பாலானவர்கள் செய்வதில்லை. தங்கள் முன்முடிவுகளையே ஆய்வு முடிவுகளாகவும் அறிவிக்கிறார்கள். ஒவ்வொரு மருந்தின் பாதுகாப்பான அளவு என்ன? எந்தெந்த நோய்களில் அல்லது எவரெவர், குறிப்பிட்ட அம்மருந்தை தவிர்க்க வேண்டும்? போன்ற அடிப்படை தகவல்களை, மக்கள் நலன் கருதியும் சர்வதேச சந்தையை கருதியும், ஆய்வுகளின் வழியாக நிறுவ வேண்டியது பாரம்பரிய மருத்துவ ஆய்வாளர்களின் கடமை.
ஆயுர்வேத மருந்துகளின் செயல்திறனை பரிசோதனை செய்வது அத்தனை எளிதானதல்ல. காரணம் நோய்மையை தனிமனிதனுடைய ஒட்டுமொத்தத்துடன் அது இணைத்து பார்க்கிறது. ஆகவே ஒருவருக்கு ஒரு நோய்க்கு பொருந்தும் மருந்து அதேபோல் பிறருக்கு பொருந்திட முடியாது. மேலும் ஒரே மனிதருக்கு நோய்மையின் வெவ்வேறு நிலைகளில் மருந்தும் மாறிக்கொண்டே இருக்கும். மருந்து சேர்க்கையில் எந்த கூட்டணு குறிப்பிட்ட செயல்பாடுகளை செய்கிறது என்று பிரித்தறிய இயலாது. இந்த சூழலில் நவீன அறிவியலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டு அண்மையில் செய்யப்பட்டு வெற்றிகண்ட சில ஆயுர்வேத ஆய்வுகள் சர்வதேச கவனத்தை பெற்றிருக்கின்றன. மெல்ல நூற்றாண்டுகால துயில் களைந்து நவீன அறிவியலுடன் ஆக்கப்பூர்வமான உரையாடலை துவக்கி இருக்கிறது.
மூலிகையை அடையாளம் காண்பதில் தொடங்கி மருந்தின் செய்முறை, அளவு போன்ற வெவ்வேறு படிநிலைகளை தரப்படுத்துவது அவசியமாகும். புற்றீசல் போல் கிளம்பி எங்கும் நிறைந்திருக்கும் மூலிகை மருத்துவ நிறுவனங்கள் மருந்து தயாரிப்பில் உண்மையில் கவனம் கொள்கிறதா? உரிய இடுபொருட்கள் சேர்க்கப்பட்டு சரியான முறையில் மருந்துகள் தயாரிக்கபடுகிறதா? இவைகளை எப்படி கண்காணிப்பது? சுரண்டப்படும் மூலிகை வளத்தை பேணுவது எப்படி? இன்று ஆயுர்வேதமும் மக்களுக்கான மருத்துவம் என்ற நிலையில் இருந்து மேட்டுக்குடியினருக்கான மருத்துவமாக மாறியது ஏன்? ஆயுர்வேத மருந்துகளின் விலையேற்றம் அச்சமூட்டும் அளவிற்கு இருப்பதன் காரணம் என்ன? நவீன மருந்துகளுடன் பாரம்பரிய மருந்துகளை சேர்த்து உட்கொள்ளும் போது நேரும் விளைவுகள் யாவை? பாரம்பரிய மருத்துவத்தில் பட்டம் பெற்ற மருத்துவர்கள் நேர்மையாகவும் ஒழுங்காகவும் நம்பிக்கையுடனும் தாங்கள் கற்றதை பின்பற்றுகிறார்களா? அரசு பாரம்பரிய மருத்துவத்தை பேணுவதற்காக கொள்கை அளவிலும் நடைமுறையிலும் மேற்கொண்ட முயற்சிகள் உண்மையில் போதுமானவையா? போன்ற சிக்கலான கேள்விகளுக்கான விடை காண முற்பட வேண்டும். அதுவே பாரம்பரிய மருத்துவம் இம்மண்ணில் தழைத்திருக்க வழிவகுக்கும்.
-சுகி