மறுக்க முடியாமல் நாம் அனைவரும் திரும்ப செல்ல நினைக்கும் பிராயம் என்பது பாலிய பிராயமாகத்தான் இருக்கும்.எத்தனை ஆனந்தங்கள் ,துள்ளல்கள் ? என்றும் அதிலேயே வாழ்த்திட மாட்டோமா என்று ஏக்கம் பிறக்கிறது. குழந்தையாய் இருந்த பொழுது வாழ்வில் வண்ணங்களும், குறுகுறுப்பும் நிறைந்த நாட்கள் போயி, வாழ்வே சுவைத்து சப்பிய பப்புல் கம் போல சுவையின்றி நிறமின்றி வெளிறி உமிழ முடியாமல் சிக்கி தவிக்கும் நாட்களாய் மாற்றம் கொள்வது ஏனோ? எந்த மனதிற்கும் குழந்தையை பார்த்தால், வாழ்தலில் ஒரு பிடிப்பும், அழகும், ஆசையும் பிறந்து மனம் உற்சாகம் அடைகிறது. அதே ஒரு வீட்டில் அந்த குழந்தைக்கு உடல் சுகமில்லை என்றால் வீடே வெயிலில் வாடிய ரோஜா இதழ் போல் வதங்கி சுருங்கி விடுகிறது, எல்லோர் மனத்திலும் ஒரு பயம் கவிகிறது.
ஆயுர்வேதத்தின் எட்டு அங்கங்களில் ஒரு முக்கியமான அங்கம் பால சிகிச்சை. இதை கௌமார ப்ருத்யம் அல்லது குமார தந்திரம் என்று ஆயுர்வேத நூல்கள் குறிப்பிடுகின்றன. முழுவதும் கிட்டாவிட்டாலும் காஷ்யப முனிவர் இயற்றிய சம்ஹிதை இன்றளவிலும் குழந்தைகள் நோய்களுக்கு வெகு முக்கியமான நூல். அஷ்டாங்க ஹ்ருதயத்திலும் விரிவாக குழந்தைகளின் நோய்களைப் பற்றியும் அதன் சிகிச்சைகளை பற்றியும் பேசுகிறது .
ஆயுர்வேதத்தின் பால சிகிச்சை நவீன மருத்துவத்தின்' பீடியாட்ரிக்ஸ்' துறையிலிருந்து வேறுபட்டது. மேலும் இப்பொழுது பீடியாட்ரிக்ஸ் துறை கூட மேலும் வளர்ந்து குழந்தைகள் நல அறுவை சிகிச்சை (Pediatrics surgeon), பிறந்த குழந்தையை கவனிக்கும் நியோனடாலஜிஸ்ட் (neonatologist) என்று புதிய துறைகள் அறிவியல் வளர்ச்சி காரணமாக பிறப்பித்த வண்ணம் இருக்கிறது . மாறாக ஆயுர்வேதத்தில் - எதிலும் ஒரு முழுமை நோக்கு இருக்கும் (wholistic approach) .ஆயுர்வேதத்தின் குழந்தை மருத்துவம் குழந்தையின் பிறப்புக்கு முன்பே, இன்னும் சொல்லப் போனால் கருத்தரிப்புக்கு முன்பே குழந்தைகளின் தாய் தந்தையிடமிருந்து தொடங்குகிறது .
ஒரு நல்ல ஆரோக்கியமான மரம் தான் நல்ல விதையை கொடுக்க முடியும், அப்படி மண்ணை அடையும் நல்ல விதையே உயர்ந்த மரமாக வளர்ந்து தழைக்க முடியும். இதனால் கருத்தரிப்பதற்கு முன், பஞ்ச கர்ம சோதனைகள் வலியுறுத்தபடுகின்றன. அதன் மூலம் தாய் தந்தையர்களின் நோய் நீக்கி, கருமுட்டை மற்றும் விந்தனுவில் உள்ள குறைகளை நீக்கி நல்ல பிள்ளைகள் பிறக்க வழிவகை செய்கின்றனர் .
ஆயுர்வேதத்தின் பால சிகிச்சை நவீன மருத்துவத்தின் மகப்பேறு (obstetric medicine) மற்றும் குழந்தைகள் மருத்துவத்தை கூட்டாக கொண்டது. கர்ப்பிணி பரிசர்யா - எனும் பெயரில் ஒவ்வொரு மாதமும் தாய்க்கு என்னென்ன சிகிச்சைகள் செய்ய வேண்டும், அவர்களுக்கு ஒவ்வொரு மாதங்களிலும் என்ன உணவளிக்க வேண்டும் என்று விரிவாக சொல்கிறது.
கர்பப்பையில் வளரும் கரு, ஒவ்வொரு மாதமும் எவ்வாறு மாற்றம் கொண்டு வளர்கிறது என்பதை பற்றி ஆயுர்வேத ஆசான்கள் கூறுகின்றனர். எந்த 'ஸ்கானிங்' வசதியும் அல்லாத அந்த காலத்தில் கரு கொள்ளும் மாற்றங்களை ஓரளவுக்கு கால பிராமனத்தோடு சரியாகவே சொல்ல முயற்சித்திருப்பதே ஆச்சர்யப்பட வைக்கும் ஒன்று தான். முழு உண்மை இல்லை என்றாலும் கூட இந்த அவதானிப்புகள் கொஞ்சம் கவித்துவமானவை. முதல் மாதத்தில் உருவமற்ற ஒரு பிண்டமாக உருவாகி, பின்னர் அடுத்து கை கால்கள்,தலை ஆகியவைகள் சிறு மொட்டு போன்று வளர்ந்து, நான்காவது மாதத்தில் இதயத் துடிப்பு, ஆறாவது மாதத்தில் புத்தி என்று செல்கிறது அவர்களது கூற்று.
பிரசவத்தின் சமயத்தில் ஏற்படும் வெவ்வேறு சிக்கல்கள் குறித்தும் அதை எவ்வாறு எதிர்கொள்வதென்றும் விரிவாக பேசுகின்றனர்.கொடி சுற்றிகொள்வது,தலை அல்லாது பிற உறுப்புகள் முதலில் வெளிவருவது,சரியான காலத்திற்கு முன்பே வெளிவருவது இப்படி இன்றைய பல சிக்கல்கள் அன்றும் பேசப்பட்டுள்ளன. ஆயுதம் கொண்டு குழந்தையை வெளியில் இழுப்பது, மற்றும் இன்றும் பின்பற்றப்படும் பல்வேறு நுட்பங்கள் (maneuvers ) பதிவு செய்யப்பட்டுள்ளன .பின்னர் பிறந்த குழந்தையை சுத்தம் செய்வது, தாய்க்கு செய்ய வேண்டிய சிகிச்சைகள், தாய்ப்பாலின் மகத்துவம், தாய்ப்பாலுக்கு மாற்று, பால் சுரக்கும் மார்புகளில் வரும் நோய்கள் மற்றும் அதன் தீர்வுகள் என்று பல்வேறு தலைப்புகளை விரிவாக அலசுகிறது.
சில இடங்களை வாசிக்கும் பொழுது கொஞ்சம் கரடுமுரடாக, நமது இன்றைய நாகரீக வாழ்விற்கு ஒவ்வாதது போல் தோன்றுகிறது. ஆகினும் கூட, இது தோல்வி அடைந்த முறை அல்ல, இத்தனை வம்சங்களாக நாம் தழைத்து இருப்பதே இதற்கு மிக சிறந்த உதாரணம் .ஆகினும் சில எளிய மாற்றங்கள் மூலமும்,கொஞ்சம் விசாலமான அணுகுமுறையுடன் நோக்கினால், இதிலிருந்து சில சாராம்சங்களை நாம் மேலே எடுத்து செல்ல முடியும் .பிறிதொரு சமயம் மகப்பேறு மற்றும் பெண்கள் மருத்துவத்தை பற்றி விரிவாக எழுதுகிறேன்.
எனது அனுபவத்தில் குழந்தைகளுக்கு மிக உகந்த மற்றும் சிறந்த மருத்துவம் ஆயுர்வேதம் தான். அன்றாடம் குழந்தைகள் சந்திக்கும் எளிய நோய்களுக்கு ஆயுர்வேதம் மிக சிறந்த தீர்வை முன்வைக்கிறது. சளி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு நவீன மருத்துவத்திற்கு ஈடாக இந்த மருந்துகள் வேகமாக செயலாற்றுகின்றன. அதே போல் பசியின்மை, மலசிக்கல், பேதி, பூச்சி, தோலில் வரும் சிரங்குகள், அரிப்பு ஆகியவற்றுக்கும் மிக நல்ல தீர்வை கொடுக்கிறது.
-சுகி