மனம் ஆயுர்வேதத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அறிதலுக்கு உதவும் ஞானேந்திரியமாகவும், செயலாற்றும் கர்மேந்திரியமாகவும் அது அறியப்படுகிறது. ஆகவே ஐந்து ஞான இந்திரியங்கள், ஐந்து கர்ம இந்திரியங்களை தவிர்த்து பதினோராவது உபய இந்திரியமாக மனம் முன்வைக்கப்படுகிறது. மனதிற்கும் உடலிற்குமான தொடர்பை ஆயுர்வேதம் தெளிவாகவே வரையறுக்கிறது. இன்று psycho- somatic disorders என்று அறியப்படும் கருதுகோள் பற்றிய புரிதல் ஆயுர்வேதத்தில் என்றும் இருப்பது தான். மன நோய் என்று தனியாக பிரித்து பார்க்காமல், உடலில் உள்ள ஒவ்வொரு நோயை பற்றி விளக்கும் போதும் அதன் காரணமாக மனம் சார்ந்த ஏதோ ஒன்று தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். தோல் நோய்கள், வாத நோய்கள், மேக நோய்கள், சுவாச நோய்கள் என பல நோய்களை பற்றிய அத்தியாயங்களில் நாம் இதை காணலாம்.
thanks - |
காமம், குரோதம், பயம், மோகம், மதம், மாத்சர்யம் எனும் அறுவகை சத்ருக்களை வென்றதன் காரணமாகவே ராமனின் சகோதரனுக்கு சதருக்னன் எனும் பெயர் வந்தது. உணர்வுகளில் அதீத உச்சம் உடலையும் மனதையும் பாதிக்கும். குரோதம் உண்மையில் உப்பு போன்றது, அது அதன் அளவை தாண்டினால் தான் இருக்கும் பண்டத்தையே வீணாக்கி விடும். நோய்களின் வசிப்பிடம் என உடலையும் மனதையும் சொல்கிறது. சுரம் போன்ற நோய்கள் மனதை தாக்கக்கூடும் என்கிறது. உடலில் வாத , பித்த, கபத்தை எப்படி முக்குற்றங்கள் என விளிக்கிரோமோ அதேப்போல் மனதின் சத்துவ, ரஜஸ், தமஸை முக்குணங்கள் என அழைக்கிறோம். சத்துவத்தை தோஷம் என அழைக்கலாகாது என்பதால் ரஜசையும் தமசையும் மட்டுமே மனோ தோஷங்கள் என்று அழைத்தனர். இந்த மனோ குணங்களுக்கும், உடற் தோஷங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஐம்பெரும் பூதங்களைகொண்டு அதை நாம் இதை புரிந்துகொள்ள முடியும். சுத்த சத்துவம் உடலில் சுத்த கபமாக பரிணமிக்கிறது, சத்துவமும் ரஜசும் கலந்த கலவையாக உடலில் பித்தம் வெளிபடுகிறது, ரஜசும் தமசும் இணைந்து உடலில் வாதத்தை இயக்குகிறது. அசுத்த கபம், தமோ குணத்தால் நிறைந்தது. ஆகவே உடலில் ஏற்படும் மாற்றங்கள் மனத்திலும், மனதில் ஏற்படும் மாற்றங்கள் உடலிலும் தென்படும் என்று ஆயுர்வேதம் முன்வைக்கிறது. உணவிலும் நாம் இதை பொருத்திப் பார்க்கலாம். பொதுவாக அசைவ உணவுகள் தமோகுனம் அதிகம் உள்ளதாக கருதப்படுகின்றன. அறுசுவைகளோடும் நாம் இதை தொடர்புபடுத்த முடியும்.
ஆயுர்வேதத்தில் மனம் சார்ந்த நோய்களை விளக்கும் போது, உண்மாதம், அபஸ்மாரம், கிரக சிகிச்சை என மூன்று பிரிவுகளுக்குள் அடக்குவதை நாம் காண்கிறோம். பைத்தியம் எனும் சொல்லின் வேர்ச்சொல் பித்தம் தான், பித்தம் தலைக்கேறிவிட்டது என்றும், குளிர்விக்க வேண்டும் என்றும் சொல்வது பித்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வழிமுறைகள் தான். ஊமத்தை செடிக்கு அந்த பெயர் வரக்காரணம் அது உண்மத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் தான். ஆயுர்வேத மூலநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பலவகையான உன்மாதங்கள் நவீன உளவியல் மருத்துவத்திற்கு மிக நெருக்கமான விளக்கங்களை அளிக்க வல்லது. அபஸ்மாரம் எனும் நோய் வலிப்பு மற்றும் அது சார்ந்த நோய்களை குறிக்க பயன்படுத்துவதாகும், எனினும் இதை மன நோயாக கருதவேண்டுமா என்பது விவாதத்திற்கு உரியது.
ஆயுர்வேதத்தில் உள்ள எட்டு அங்கங்களில் ஒன்று தான் கிரக சிகிட்சை அல்லது பூத வித்யா. குழந்தைகளை பீடிக்கும் பலவித நரம்பு மண்டல நோய்கள் ( உதாரணமாக- cerebral palsy), வளர்ச்சிக் குறை போன்றவற்றை வெவ்வேறு தீய சக்திகள் உண்டு செய்வதாக அக்காலத்தில் நம்பப்பட்டது. இதைத்தவிர பேய்கள், யட்சிகள், யக்ஷர்கள், ராக்ஷசர்கள், கந்தர்வர்கள் போன்றவர்கள் ஆக்கிரமிப்பதால் வரும் நோய்களை பற்றியும் குறிப்பிடுகின்றன. இது சார்ந்த நம்பிக்கைகளின் உண்மை நிலவரம் தான் என்ன? இதெல்லாம் வெறும் மூட நம்பிக்கைகள் தானா? இவைகளை இன்றைய அறிவியல் யுகத்தில் எவ்வாறு புரிந்துகொள்வது?
-சுகி