மனிதர்களின் ஆளுமைகளை பலவாறாக வகுத்து விளக்குகிறது நவீன உளவியல். ஆயுர்வேதத்தில் சத்வ காயம், ராஜச காயம், தாமச காயம் என மூன்று குணங்களை ஒட்டி ஆளுமை கூறுகளை விளக்குகிறது. பெரும்பாலான ஆளுமை கோளாறுகள் உருவாவதற்கான வாய்ப்புகள் (personality disorders) இளம் வயதிலேயே தீர்மானிக்கப் படுகிறது. ஆழ்மன ஏக்கங்களும் துக்கங்களும் மேலெழும் தருணங்களில் அவர்கள் முற்றிலும் வேறு மனிதர்களாக ஆகிவிடுகின்றனர். பேய் பிடிப்பது போன்றவைகளை நாம் இப்படித்தான் புரிந்துகொள்ள முடியும். இதை ஒருவகையான வடிகால் என்றும் பார்க்கலாம். ஆகவே அவர்களின் தீர்ப்பதற்கு சாத்தியமான ஏக்கங்களை சமன் செய்வதன் மூலம் அந்த பிளவுபட்ட ஆளுமையின் தேவையை நாம் இல்லாமல் ஆக்குகிறோம். படையல்களை அப்படி புரிந்துகொள்ளலாம். ஆபத்தானவர்களை தனிமைபடுத்துவது (பிறர் நன்மையை கருத்தில் கொண்டு) எனும் பழக்கம் அன்று முதல் இன்று வரை தொடர்கிறது. இத்தகு வியாதிகளில் கையாளப்படும் வன்முறை சார்ந்த வழிமுறைகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. ஏற்புடையதும் அல்ல.எனினும் நவீன உளவியல் மனதின் ஒரு சித்திரத்தை அளிக்கிறது என்றால் ஆயுர்வேதம் அதே மனதை மாற்று கோணங்களில் அணுகுகிறது. மன சிக்கல்களுக்கு வெறும் மயக்க மருந்துகள் மட்டுமே தீர்வு அல்ல என்பதையும் நாம் கணக்கில் கொண்டாக வேண்டும்.
அறியப்படும் பொருள்- ஐம்பொறிகள் – மனம்- ஆன்மா ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போதே மெய்யான அறிதல் சாத்தியமாகிறது. இவைகளில் ஏதோ ஒன்று சற்றே விலகினாலும் குறைபட்ட அறிதலே சாத்தியம். இந்திய மரபில் மனதிற்கு அபாரமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து மனதை குவிய செய்யும் திராடகம், தாரணம் போன்ற பயிற்சிகளை அது வலியுறுத்துகிறது. மிக முக்கியமாக பிராணனுக்கும் மனதிற்கும் உள்ள உறவை நுட்பமாக யோகம் பதிவு செய்துள்ளது. பிராணன் என்பது உடலில் உள்ள பஞ்ச வாயுக்களில் ஒன்று. (பிராண, உதான, வியான, சமான, அபான- இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி செயல்கள் உண்டு). பஞ்ச வாதங்களில் தலையாயது பிராண வாயு தான். இந்த பிராணனை நெறிபடுத்தி பழக்கும் வழிமுறைகளையே நாம் பிராணாயாமம் என்கிறோம்.
‘சலே வாதம் சலே சித்தம், நிஷ்சலே நிஷ்சலம் பவேத்’
எனும் இந்த வரி வாதத்திற்கும் மனதிற்கும் உள்ள நுட்பமான உறவை சூட்டுவதாகும். உடலில் உள்ள வாத தோஷம் சலனம் அடைந்திருந்தால் மனமும் சலனம் அடையும். உடலில் உள்ள வாதம் கட்டுக்கோப்புடன் இருக்கும் போது மனமும் சலனமற்று அமைதியாக இருக்கும். ஆகவே மனம் அமைதியுடன் இருக்க உடலில் வாதத்தை அதிகரிக்கும் ராஜச உணவுகளை தவிர்த்தல் மிக முக்கியம் ( கிழங்கு வகைகள்).
அந்தகரன சதுஸ்டயம் என்று நம் மரபில் நான்கு கரணங்களை பற்றி குறிப்பிடபடுகிறது. மனம், புத்தி, சித்தம், அகம்காரம் ஆகியவையே அவைகள். மனதின் வெவ்வேறு பணிகளை நுட்பமாக பிரித்து புரிந்துகொள்ள முடியும்., , அகங்காரம் அனைத்தையும் தன்னோடு தொடர்புபடுத்தி புரிந்துகொள்கிறது- ஒரு நிகழ்வை , ஒரு பொருளை என அனைத்தையும் தன்னோடு தொடர்பு படுத்துகிறது, ஒரு விஷயத்தை பகுத்தறிய முயல்வது புத்தியின் வேலை, லாபமா நட்டமா? சரியா தவறா? போன்ற கேள்விகளை அது எழுப்பி ஒரு முடிவுக்கு வருகிறது. அதன் நினைவுகளை தேக்கி வைப்பதும் அழிப்பதும் சித்தத்தின் கடமை, முன் அனுபவங்களை கொண்டு சரிபார்த்து புத்தி ஒரு முடிவுக்கு வருகிறது, இந்த முடிவும் சித்தத்தால் பாதுகாத்து வைக்கப்படுகிறது. பின்னர் முடிவை இறுதி செய்து அதை நோக்கி உறுதியுடன் செயலாற்ற துணிவது மனதின் பணி. இத்தனை பிரிவுகள் இருந்தாலும் மனம் என்பது ஒன்று தான். உடலெங்கிலும் உணர்ச்சிகளை நம்மால் உணர்ந்து எதிர்வினையாற்ற முடிந்தாலும், அதன் வேகத்தின் காரணமாகவும் , சூக்கும தன்மை காரணமாகவும் ஒரே நேரத்தில பல விஷயங்களை நாம் செய்வது போல தோன்றுகிறது.
ஆயுர்வேதம் மனதை பிரபஞ்ச பேரியக்கத்தின் ஒரு பகுதியாக பார்க்கிறது. மனதை பழக்கி அதை ஒரு இயந்திரமாக மாற்றி பல யோக சித்திகளை சாதிக்க முடியும் என்பது அனுபவபூர்வமான உண்மையே.
-சுகி