Tuesday, 24 September 2013

ரச சாத்திரம் - ஓர் எளிய அறிமுகம்


கனிமங்களையும், உலோகங்களையும் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் பிரிவை ரச சாத்திரம் என அழைக்கின்றனர். அறுவை சிகிச்சை வலுவாக பழகபட்ட காலத்தில் இந்தியா முழுவதும் பௌத்தமும் சமணமும் செல்வாக்குடன் பரவியது. அதை ஒட்டி , அறுவை சிகிச்சை ஒரு விதமான ஹிம்சை எனும் நம்பிக்கை ஏற்பட்டது, ஆகவே அதற்கு மாற்றாக, அதை காட்டிலும் விரைவாக செயலாற்றும் ஓர் மருத்துவ முறைக்கான தேடல் ரச சாத்திரத்தில் வந்து நின்றது.



ரச சாத்திரத்தை பொருத்தவரை எதுவும் எதுவாக வேண்டுமானாலும் மாறலாம். அனைத்து கனிமங்களும் பாதரசமாக மாறும் என்பது அவர்களின் நம்பிக்கை. ரச சாத்திரத்தில் இரு போக்குகள் உண்டு, லோக வாதம் மற்றும் தேக வாதம். பிற உலோகங்களை தங்கமாக மாற்றும் யுத்தியே லோக வாதம் எனும் மரபாகும். பல வேதியல் பரிசோதனைகள் மூலமும் சித்திகள் மூலமும் அது சாத்தியம் என்று நம்பினர். ரகசியமான குருமரபில் இது பயிலப்பட்டு வந்தது. தங்கமாக்கும் முயற்சியில் வெவ்வேறு வேதியல் பொருட்களை உபரியாக கண்டடைந்தனர். அவைகளின் மருத்துவ பயன்களை கண்டுகொண்டு அதை வெவ்வேறு நோய்களுக்கு எதிராக பயன்படுத்த தொடங்கினர்.

அல்கேமி எனும் இந்த துறை உலகின் வெவ்வேறு நாடுகளில் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது. குறிப்பாக பெர்சிய பிரதேசத்தில் பரவலாக தாக்கம் ஏற்படுத்தியது. இங்கிருந்து அங்கு சென்றதா அல்லது அங்கிருந்து இங்கு வந்ததா என்பதை கணிப்பது மிக கடினம். ஆனால் உலகத்தின் பல்வேறு நாகரீகங்களில் அல்கேமி துறைக்கு ஏதோ ஓர் வகையில் பங்கு உண்டு. நவீன வேதியலுக்கும் மருந்தாளுமைக்கும் அது பலவகையிலும் முன்னோடி என கருதலாம். மூலக்கூறுகளில் (ore) இருந்து உலோகங்களை பிரித்தெடுக்கும் (extraction ) செயல்பாடுகள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன.

சரகரின் காலத்திலேயே கந்தகத்தின்( sulphur) புற பயன்பாடு குறித்து கூறப்பட்டுள்ளது. எனினும் விரிவாக பாதரசம், கந்தகம், தாளகம் (arsenic), தங்கம், வெள்ளி, தாமிரம், ஈயம், இரும்பு, அப்ரகம்(mica), பல்வேறு ரத்தினங்கள் உட்பட பல தாதுக்களை மருத்துவத்திற்கு பயன்படுத்த தொடங்கியது பனிரெண்டாம் நூற்றாண்டில் இருந்து தான். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வாக்பட்டர் காலத்திலேயே பல தாத்துக்களின் பயன்பாடு குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது.

பொதுவாக, இந்த உலோகங்களையும் கனிமங்களையும் ஆயுர்வேதம் அப்படியே பயன்படுத்த அனுமதிப்பதில்லை. அவைகளை சுத்தி செய்து, பின்னர் பல்வேறு வழிமுறைகளை கையாண்ட பின்னரே பயன்படுத்த முடியும். வெறும் உலோக கலவைகளை மட்டும் பயன்படுத்துவது அல்ல ஆயுர்வேதத்தின் வழிமுறை அத்தோடு பல்வேறு மூலிகைகளும் கலந்திருக்கும் என்பது முக்கியமானது.

கந்தகத்தின் கிரிமிநாசினி குணம் பற்றிய அறிவு பண்டைய காலத்தில் இருந்தே இந்தியாவில் உண்டு. தங்கத்தை சர்வ ரோக நிவாரணியாக, ஆயுளையும் பலத்தையும் கூட்டுவதாக ஆயுர்வேதம் சூட்டுகிறது. ரச சாத்திரத்தின் பயன்பாட்டிற்கான தேவையை பற்றி சொல்லும் போது, அது மூலிகை மருந்தை காட்டிலும் விரைவாக செயல்படும் என்கின்றனர். ரச சாத்திரத்தின் மிக முக்கியமான ஆளுமையாக கருதப்படுபவர் புத்த துறவியான நாகார்ஜுனர் தான். சிவனையே ரசவாதிகள் தலையாய கடவுளாக வணங்கினர். ரச வாதத்தில் தேர்ச்சி என்பது ஒரு வகையான சித்தியாக கருதப்பட்டது, பெரும்பாலான ரசவாதிகள் சித்தர்களாகவும் கருதப்பட்டனர்.

தமிழகத்தின் சித்தர் மரபுக்கும் ரசவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சித்த மருத்துவத்தில் பற்பங்கள், பாசானங்கள் உட்பட பல உலோகங்களையும் தாதுக்களையும் பயன்படுத்துவதை காணலாம். சித்த மருத்துவத்தின் தொன்மையை கணக்கில் கொண்டால், ஆயுர்வேதத்தில் ரசவாதம் பிற்காலத்தில் தான் தோன்றியது. ரச சாத்திர நூல்களில் உள்ள பல சுலோகங்களை இன்று வரையில் முழுவதுமாக புரிந்துகொள்ள முடிவதில்லை. அது பயன்படுத்திய குறியீடுகளும், ரகசிய குறி சொற்களும் இன்று வழக்கில் இல்லாதவை. 

ரச மருந்துகள் பயன்பாட்டில் எப்போதும் கூடுதல் கவனம் தேவை. மருந்து உரிய முறையில் சுத்தி செய்திருக்க வேண்டும். அளவும் கச்சிதமாக இருக்க வேண்டும். நோயரிந்து அதற்கு ஏற்றார் போல், சில நாட்கள் மட்டுமே உட்கொள்ள வேண்டும். மூலிகை மருந்து போல தொடர்ந்து உட்கொள்வது தவறான விளைவுகளை ஏற்படுத்தும். பல பத்தியங்களை கடைபிடித்தலும் தேவை படலாம். 

இன்று ரச மருந்துகள் பயன்பாட்டில் சொல்லப்படும் பின்விளைவுகள் (கிட்னி பாதிப்பு போன்றவை) பெரும்பாலும், இந்த வரையறைகளில் ஏதேனும் ஒன்றை சரிவர பின்பற்றாத கவனக்குறைவினால் தான் என உறுதியாக கூறலாம். கவனமாக பயன்படுத்தும் பட்சத்தில் ரச மருந்துகள் உண்மையில் அற்புதமான விளைவுகளை ஏற்படுத்தும்.       

-சுகி