Wednesday, 11 September 2013

அக்னி

வாத, பித்த, கபம் ஆகியவைகள் முக்குற்றம் அல்லது திரிதோஷம் என்று அழைக்கப்படுவதுப் போல், வியர்வை (ஸ்வேதம்). மலம் மற்றும் மூத்திரம் மூன்று கழிவுகள் என்று கருதப்படுகின்றன. தோஷங்கள் கூட கழிவுகளாகவே சொல்லப்படுகிறது. நாம் உட்கொள்ளும் ஆகாரம் எப்படி செரிமானம் ஆகிறது என்பதைப் பற்றி ஆயுர்வேதம் விரிவாக விளக்குகிறது. ரசம், ரக்தம், மாம்ச, மேதஸ், மஜ்ஜா. அஸ்தி மற்றும் சுக்கிரம் என ஏழு தாதுக்கள் நம் உடலில் உள்ளன.



உடலுக்கு மற்றொரு பெயர் காயம். காயமே இது பொய்யடா காற்றடைத்த பைய்யடா என்பது நினைவுக்கு வரலாம். சமஸ்க்ருதம் ‘சீயதே அன்னாதிபிஹி காயஹ’ என்று காயம் எனும் சொல்லுக்கு விளக்கம் அளிக்கிறது. அதாவது அன்னத்தினால் வளர்வதாலே இதற்கு காயம் என்று பெயர். ஜடப் பிரபஞ்சத்திற்கும் நமக்குள் உறைந்திருக்கும் உயிருக்கும் இடையிலான தொடர்பு அன்னம் வழியாகவே நிகழ்கிறது. ஐம்பெரும் பருப்பொருட்களின் கூட்டினால் ஆன (பஞ்ச மகாபூதம்) இந்த ஜடப் பிரபஞ்சத்தில் விளையும் ஐம்பெரும் பருப்பொருட்களின் கூட்டினால் ஆன உணவை ஐம்பெரும் பருப் பொருட்களினால் ஆன இந்த உடல் உண்டு உயிரைப் பேணுகிறது. நாம் எதை உண்ணுகிறோமோ அதுவே நாமாகிறோம். இந்த அடிப்படை புரிதல் நமக்கு அவசியமாகிறது. ஏன் சில உணவு வகைகளை, காய்கறிகளை நம் முன்னோர்கள் ஒதுக்கினார்கள் என்பதை இந்தப் பின்னணியில் தான் நாம் புரிந்துகொள்ள இயலும்.

வயிற்றில் இருக்கும் அக்னியின் பெயர் ஜடரா அக்னி. தோஷங்களின் ஏற்ற இரக்கத்திற்கு ஏற்ப அக்னியின் நிலையும் மாறும். உட்கொள்ளப்படும் உணவு ஜடரா அக்னியால் சார பாகம்(சத்துள்ள பாகம்) கிட்ட பாகம் (மல பாகம்) எனப் பகுக்கப் படுகிறது. நுண்சத்துக்கள் நிறைந்த சார பாகத்திலிருந்து உடலின் ஏழு தாதுக்களுக்கு ஊட்டச்சத்து செல்கிறது. கழிவுகள் நிறைந்த கிட்ட பாகத்தில் இருந்து மலங்கள் உருவாகின்றன. தோஷங்களும் கிட்ட பாகத்திலிருந்து தான் உருவாகிறது. 

ஜடராக்னியின் அம்சம் தான் ஏழு தாதுக்களின் அக்னியாகவும் பஞ்ச பூதங்களின் அக்னியாகவும் பரிணாமம் கொள்கிறது. ஜடராக்னி சரியாக இருந்தால் தான் பிற அக்னிகள் சரியாக இருக்க முடியும். ஒவ்வொரு தாதுக்கும் உரிய போஷாக்கு அந்தந்த அக்னியால் தான் வழங்க முடியும். தாதுக்களின் அக்னி சீண்டப்படும் போது நோய் உருவாகிறது. தாதுக்களின் அக்னி சீண்டப்பட ஜடராக்னியில் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆகவே அனைத்து நோய்களும் அக்னியின் சமநிலை குலைவினால் தான் ஏற்படுகிறது என்கிறது ஆயுர்வேதம். 

செரிமானம் சரிவர ஆவதற்கு சில அம்சங்கள் சமநிலையில் இயங்க வேண்டும். வயிற்றில் உள்ள பாசக பித்தம் ஜடராக்னியின் அம்சமாக செரிமானத்தை கவனிக்கிறது. ஐந்து விதமான வாயுக்களில் ஒன்றான சமான வாயு அக்னியை தூண்டிவிட்டு சரிவர இயங்க உதவுகிறது. ஐந்து விதமான கபங்களில் ஒன்றான க்லேதகம் உணவை உரிய முறையில் பதப் படுத்த உதவுகிறது. 

ஐம் பூதங்களால் ஆன உணவு பூதாக்னியால் பிரிக்கப்பட்டு உடலின் அந்தந்த அம்சத்தை போஷிக்கின்றன. அக்னியை வடவம் , அனலம், வைஷ்வானரம் என்று பல பெயர்களில் துதிக்கிறார்கள். அக்னி சக்தியின் குறியீடு. ஒன்று மற்றொன்றாக மாறிக்கொண்டே இருக்கும் பிரபஞ்சத்தில் , மாற்றத்தை நிகழ்த்தும் சக்தியாக திகழ்வது அக்னி. சத்வம் மற்றும் ரஜஸ் ஆகிய குணங்களின் கலவையால் உருவானது தான் அக்னி என்கிறது ஆயுர்வேதம். 

வாதத்தினால் பாதிக்கப்படும் அக்னியை விஷமாக்னி என்று அழைக்கிறார்கள். பசியும் பசியின்மையும் மாறி மாறி வரும். பித்தம் சமநிலை குலைவதால் பாதிக்கப்படும் அக்னியை தீக்ஷ்ணா அக்னி என்கிறோம். அக்னி அதன் தீவிர நிலையில் இருக்கும். அக்னியும் பித்தமும் ஒரே அம்சங்களை கொண்டது, எனினும் நுட்பமான வேறுபாடு கொண்டது. ஆகவே அதீத பசி இருக்கும். வயிற்று எரிச்சல், நெஞ்சு கரிப்பு, குடற் புண் ஆகியவை வரும். பஸ்மக அக்னி என்பது இதனுடன் ஒட்டிய ஒரு நிலையாகும். எரிந்து சாம்பல் ஆவது போல் உணவு வயிற்றின் அக்னியால் உடனுக்குடன் சாம்பலாக்கப்படும். பசி அடங்கவே அடங்காது. தைராய்ட் சுரபியின் தீவிர செயல்பாட்டு நிலையில் அதிகம் சுரக்கும் ஹைப்பர் தைராய்ட் நோய்களில் இக்கூறுகளை நாம் காணலாம். கபம் துஷ்டி அடைவதால் வரும் அக்னியின் நிலையை மந்தாக்னி என்று குறிக்கிறது ஆயுர்வேதம். பசியின்மை, ருசியின்மை, செரிமானம் இன்மை ஆகியவை இதன் குறிகள்.
-சுகி