மெய்யியல் சிந்தனை முறைமைகளில் இந்தியத்தன்மை என்று ஏதும் உண்டா? சுழற்சி, முடிவிலி, பன்மையை ஏற்றுகொள்வது, ஒன்றே பலவாக பரினமிப்பது - போன்ற கருத்துக்களை இந்தியத்தன்மையுடன் பொருத்திக் கொள்ளலாம். ஆயுர்வேதத்தைப் பற்றி சொல்லும் போது தொடக்கமும் ஒடுக்கமும் இல்லாத அழிவற்ற அறிவு என்று சரகர் குறிப்பிடுகிறார். இது வழமையாக நம் மரபில் எல்லாவற்றைப் பற்றியும் சொல்லப்படுவது தான் என்பதாலோ என்னவோ அதைப்பற்றி அதிகம் யாரும் அலட்டிக்கொள்வதில்லை.
ஆயுர்வேதத்தை மாற்று கோணங்களில் அணுகும் ஒரு நூலை உருவாக்க வேண்டும் எனும் யோசனை சில மாதங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது எனக்கு, அதன் ஒரு பகுதியாக ஆயுர்வேத நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ள தொன்மக் கதைகளை தொகுக்கத் தொடங்கினேன். தொன்மங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப் பட்டுள்ளன? அவைகளுக்குள் ஏதேனும் பொதுத்தன்மை இருக்கிறதா? குறியீட்டு ரீதியாக பொருள் விளக்கிக் கொள்ள இயலுமா போன்ற கேள்விகளை மனதில் கொண்டு இத்தேடலில் இறங்கினேன்.
ஆயுர்வேத சம்ஹிதைகளை வாசிக்கும் எவரும் முதன் முதலில் எதிர்கொள்ளும் தொன்மம் என்பது ஆயுர்வேதம் பூமிக்கு வந்த கதையாகத்தான் இருக்கும். நான்கு வித புருஷார்த்தங்கள் என்று சொல்லப்படும் - அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவற்றில் வீடுபேறு நம் மரபுகளில் முக்கியமானதாக கருதப் படுகிறது. மானுடப் பிறப்பிற்கான காரணமே அது தான் என வரையறை செய்கிறது. முன்பொரு காலத்தில் அதற்கான முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட முனிவர்களுக்கு பெருந்தடையாக நோய்கள் திகழ்ந்தன. ஆகவே தேவர்களின் நகரமான அமராவதிக்கு முனிவர்களின் குழாம் ஒன்று சென்று தேவேந்திரனின் உதவியை நாடியது. தேவர்களின் வைத்தியர்களான அஸ்வினி குமாரர்கள் இந்திரனுக்கு ஆயுர்வேதத்தை உபதேசித்து இருந்தனர். அவர்கள் தக்ஷனிடம் ஆயுர்வேதத்தைக் கற்றவர்கள். தக்ஷன் நான்முகனிடம்நேரடியாக கற்றுக்கொண்டான். படைக்கும் கடவுள் பிரம்மனே ஆதி குருவாகிறான். ஒவ்வொரு சம்ஹிதையிலும் ஒவ்வொரு குரு பரம்பரையைப் பற்றிய விவரணை இருக்கிறது.
இந்தக் கதையை வாசித்துக் கொண்டிருக்கும் போது நான் அத்வரை கவனிக்கத் தவறிய ஒரு சொற்றொடரை கண்டெடுத்தேன். இயல்பாகவே ஒரு கேள்வி எழும், பிரம்மன் எத்தனையோ விஷயங்களைப் படைத்தது போன்று ஆயுர்வேதத்தையும் படைத்தானா? அல்லது பிரம்மன் யாரிடமிருந்து பெற்றுக்கொண்டான்? சரகர் 'பிரம்மா ஸம்ருத்வா' என்கிறார். ஒருநொடியில் எல்லாம் துலக்கம் பெற்றது போன்ற உணர்வு. ஸம்ருத்வா என்றால் பிரம்மா நினைவு கூர்ந்தார் என்று பொருள். ஆம் அவன் உருவாக்கவில்லை, அவன் நினைவு கூர்ந்தான்!
ஆயுர்வேதத்தை தோராயமாக தமிழ் படுத்தினால் வாழ்வறிவு என்று பொருள் வரும். வாழ்க்கையைப் பற்றிய அறிவு எப்போது தொடங்குகிறது? முதல் உயிர் இந்த புவியில் உருவான அக்கணத்தில் அதற்கு தேவையான வாழ்வறிவு உருவாகிறது. கணப்பொழுது வாழ்ந்து மரித்தாலும் கூட அடுத்த முறை அது ஜனிக்கும் போது அதன் முந்தைய தவறை சரி செய்துகொண்டு விடுகிறது. கணக்கற்ற தவறுகளை திருத்திக்கொண்டே உயிர் வாழ்தல் முன்னகர்ந்து செல்கிறது. உயிரற்ற ஒற்றை புரதம் உயிருள்ள செல்லாகி, அது பல்கிப் பெருகி மனிதனாக தழைத்து வளர்கிறது. முதல் உயிர் உதித்தது கூட அதற்கு முன் அதற்கான பல முயற்சிகள் தோற்று ஏதோ ஒரு கூட்டு சரியாக அமைந்ததினால் மட்டுமே. வாழ்வறிவு வாழ்க்கைக்கு முன்பே தொடங்கிவிடுகிறது போலும்! இந்த வாழ்வறிவு, சரிகளும் தவறுகளும் அடுத்தடுத்த தலைமுறைகளை சென்று சேர்ந்தவண்ணம் இருக்கிறது. கஷாயங்களும், சூரனங்களும், வாத -பித்த- கபங்களும், ஊசிகளும், மாத்திரைகளும், அக்குப்ரெஷர்களும், மதர் டின்க்சர்களும், ஜின்செங்களும், ஸ்டெம் செல்களும் மகத்தான வாழ்வறிவு எனும் பெருநதியின் சிறு தெறிப்புகள் மட்டுமே. உயிரின் தொடக்கமே ஆயுர்வேதத்தின் தொடக்கம் அதன் ஒடுக்கமே இதன் ஒடுக்கமும். ஒரு கோணத்தில் முதல் உயிருக்கு முந்தியே வாழ்வறிவு இருந்தது, கடைசி உயிர் மரித்தபின்னரும் அது இருக்கும். ஆம் ஆயுர்வேதம் ஒரு மருத்துவ முறை மட்டுமல்ல, அது வாழ்நெறியும் கூட.
-சுகி