அஷ்டாங்க ஆயுர்வேதத்தின் (ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகள்) மற்றுமொரு மிக முக்கியமான பிரிவு ஷாலக்கியம். ஷாலக்கியம் எனும் பிரிவு கழுத்து பகுதிக்கு மேலுள்ள உறுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவாகும். கண், காது, மூக்கு, பல், வாய், தொண்டை, தலை என கழுத்துக்கு மேலுள்ள உறுப்புகள் அனைத்தையும் உள்ளடக்கியது. எண் ஜான் உடலிற்கு சிரசே பிரதானம் என ஒரு வழக்கு புழங்குவதை நாம் அறிவோம். சிரஸ் ஒரு வர்ம ஸ்தானம் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.
பற்கள் பராமரிப்பில் ஆயுர்வேதம் பல்வேறு விதிமுறைகளை வலியுறுத்துகிறது. ஆலும் வேலும் பல்லுக்குறுதி- என்பதிற்கு இணங்க. குறிப்பிட்ட சில சுவைகள் கொண்ட குச்சிகளை மட்டுமே பல் தேய்க்க பயன்படுத்த வேண்டும் என கூறுகிறது. குச்சி நேராக, எவ்வித முடிச்சுகளும் இன்றி பனிரெண்டு அங்குலம் நீளம் இருக்க வேண்டும் என சொல்கிறார் சரகர். பற்பொடிகள் பற்களை காட்டிலும் ஈறுகளுக்கே வலுசேர்க்கும். தினமும் எழுந்தவுடன் நல்லெண்ணெய் வாயில் அடக்கி வாய் கொப்பளிக்க வேண்டும் (கவலம் என்று பெயர்). அதன் பின்னர் ஆயுர்வேத பற்பொடி அல்லது திரிபலா சூரணத்தை கொண்டு ஈறுகளில் நிதானமாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்னர் சுடு தண்ணீரில் கல் உப்பு அல்லது திரிபலா சூரணம் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். வெறும் சுடு தண்ணீரிலும் செய்யலாம், தவறில்லை. அதன் பின்னர் சாதரணமாக ஏதோ ஒரு மூலிகை பற்பசை கொண்டு பல் துலக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பல்லிலும் வாயிலும் எந்த பிரச்சனையும் அத்தனை எளிதாக வராது.
அன்றைய காலங்களில் அரித்த பூச்சி பற்களில் இடைவெளிகளை நிரப்ப வெல்லப்பாகு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பற்களை பிடுங்குவதற்கு என்றே சில பிரத்யேக உபகரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கிராம்பு மற்றும் கிராம்பு எண்ணெய் பல் வலியை மட்டுப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.
கதிராதி வடி என்றொரு மருந்து அனைத்து வாய் நோய்களுக்கும் பரிந்துரைக்க பட்டுள்ளது. வாய் துர்நாற்றம் அகற்றுவதிலும் பெயர்பெற்றது. கண் நோய்களை பொருத்தவரையில் சொட்டு மருந்து விடுதல், வெவ்வேறு கஷாயங்களை கொண்டு கண்ணை சுத்தப்படுத்துதல், அக்ஷி தர்ப்பண சிகிச்சை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இளநீர் குழம்பு, நேத்ராமிர்தம், நயனாம்ருதம் போன்றவை கண் நோய்களுக்கு உகந்தத சொட்டு மருந்துகள். குறிப்பாக கண் எரிச்சல், பார்வை கோளாறு போன்றவைகளுக்கு உதவும். த்ரிபலாதி க்ருதம், மகா த்ரிபலாதி க்ருதம், ஜீவந்தியாதி க்ருதம், திக்த்க க்ருதம் ஆகியவைகள் அக்ஷி தர்ப்பண சிகிச்சைகளுக்கும் , உட்பிரயோகமாகவும் தோஷங்களின் தன்மைக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகின்றன. கண்களை சுற்றி உளுந்து மாவினால் பாத்தி கட்டி அதில் இளம் சூடாக மேற்சொன்ன க்ருத யோகங்களில் ஏதோ ஒன்றை கண்களில் விட வேண்டும். பின்னர் மெல்ல கண்களை மெல்ல திறந்து திறந்து மூட வேண்டும். நோயின் தன்மைக்கு ஏற்ப கண்களில் அவை எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும். பார்வை நோய்களுக்கு ஓரளவு நல்ல பலனளிக்கும் சிகிச்சை முறை. திரிபலா சூரணம் தினமும் இரவில் உட்கொள்வது கண்களுக்கு நல்லது என்கிறது ஆயுர்வேதம். நேரடியாக கண்களில் சூடு படுவது பார்வையை அழிக்கும். கண்ணில் கணக்கற்ற நுண் ரத்த குழாய்கள் உள்ளன. ஆகவே ஜலதோஷத்திற்கு ஆவி பிடிக்கும் போது கூட கண்களை நேரடியாக நீராவிக்கு காட்டுவதை தவிர்க்க வேண்டும்.
பலா ஹடாதி, அசன ஏலாதி, அசன வில்வாதி, அசன மஞ்சிஸ்டாதி போன்ற எண்ணெய்கள் வெவ்வேறு வகையான சிரோ ரோகங்களுக்கு உகந்தது. நசியம் எனும் மூக்கின் வழி மருந்தை செலுத்தும் முறை அனைத்து வகையான ஷாலாக்கிய நோய்களுக்கும் பயன் தரும். ஒவ்வாமையினால் வரும் தும்மல் மூக்கடைப்பு போன்றவைகளுக்கு தாலீசாதி, வியோஷாதி வடகம், ஹரித்ரா காண்டம் போன்ற மருந்துகள் அபார பலனளிப்பவை. ஒவ்வாமை வகை நோய்களை பொருத்தவரை நோய் எதிர்ப்பு சக்தியே அனைத்தையும் தீர்மானிக்கின்றன. ஆகவே அவைகளை முற்றிலும் ஒழிப்பது என்பது மிகக்கடினம்.
-சுகி