Saturday, 25 January 2014

ரசாயனமும் முதுமை மருத்துவமும் - 2

வயோதிக பிரச்சனைகளுக்கு ஆயுர்வேதம் எவ்வாறு உதவும் எனும் கோணத்தில் சென்ற பதிவில் எழுதியிருந்ததன் நீட்சி தான் இந்த பதிவு. முன்னரே குறிப்பிட்டது போல் வயோதிகத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான முயற்சி இளமையில் இருந்தே தொடங்க வேண்டும். பஞ்ச கர்ம சிகிச்சைகளை செய்துகொண்டு தோஷங்களை அவ்வப்போது வெளியேற்றி, உணவு பழக்கங்களை உரிய முறையில் வரையறை செய்துக்கொண்டு உடலை பேணுவது முக்கியம். சரகர் சொல்கிறார், “சர்வம் அன்யேத் பரித்யஜ்ய சரீரம் அனுபாலயேத்” – எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு உடலை பேணுவதற்கு நாம்  முக்கியத்துவம் அளித்தாக வேண்டும். 


வயோதிகத்தில் நாம் காணும் மிக முக்கியமான, பரவலான சிக்கல்- மூட்டு வலி என கூறலாம். மூட்டுகளில் உள்ள ஜவ்வில் நீரம்சம் வற்றி எலும்புகள் உராய்ந்து வலி ஏற்படும். குறிப்பாக நடந்தால், படி ஏறினால் வலி அதிகமாகும். ஓய்வின் போது வலி குறையும். கால் மூட்டை நீட்டி மடக்கும் போது உராய்வின் ஒலி வெளியே கேட்கும். எலும்பு தேய்மானம் என நாம் இதை குறிப்பிடுகிறோம், எலும்புகள் தேய்வதில்லை. அதனுள் இருக்கும் ஜவ்வு தான் நீர்த்து போகிறது. ஆரம்ப நிலையில் கண்டுகொண்டால் தொடர்ந்து நாராயண தைலம், போன்ற தைலங்களை இளஞ்சூடாக தேய்த்து ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி கட்டுப்படும். ரத்த ஓட்டம் அதிகமாகும், பிராணவாயு அதிக அளவில் சஞ்சரிக்கும் என்பதால் மூட்டு தன்னை விரைவில் சீர் செய்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. எலும்பு தேய்மானத்தை பொருத்த வரை அதில் பல்வேறு படிநிலைகள் உண்டு, ஆரம்ப நிலைகளில் சிநேகமும் உபனாஹ ஸ்வேதமும் உதவும். உள்ளுக்குள் ஆயுர்வேத மருந்துகள் உட்கொள்ள வேண்டும். நாட்பட்ட தேய்மானம் மருந்துகளுக்கு அடங்காது. இன்றைய காலகட்டத்தில் ஆர்த்தோஸ்கோப், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை போன்றவைகள் ஓரளவிற்கு நல்ல பலனளிக்கின்றன. மூட்டுக்கான தசை பயிற்சி தொடர்ந்து செய்து வருவது, உடல் பருமனை கட்டுக்குள் வைப்பது போன்றவை மிக முக்கியமானது. வாய்வு பதார்த்தங்கள், எண்ணெய் பதார்த்தங்கள் குறைத்து கொள்வது நலம் பயக்கும். 

 சர்க்கரை நோய் சில ஆண்டுகளுக்கு முன்னர் முதுமையின் அடையாளமாக இருந்தது. ஆனால் இப்போது மத்திய வயதினரும் இளைஞர்களும் அதிக அளவில் பாதிக்கப் பட தொடங்கிவிட்டனர். சர்க்கரை நோயின் மிக முக்கியமான சிக்கல் அது உடலின் வெவ்வேறு தளங்களில் ஏற்படுத்தும் சேதம் தான். சிறுநீரகம், கண், நரம்பு, இதயம், மூளை என பல தளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதில் வேடிக்கை என்னவென்றால், கட்டுப்பாடான சர்க்கரை அளவு என்பது இவைகளில் இத்தகைய விரும்பத்தகாத விளைவுகளில் இருந்து நம்மை காக்கும் என்பது அத்தனை உண்மை அல்ல என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது கட்டுப்பாடுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சர்க்கரை வந்த சில ஆண்டுகளில் இத்தகைய விளைவுகள் சிலருக்கு ஏற்படும் என கருதுகின்றனர். அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள் மற்றும் மருந்துகள் பயன்படுத்த வேண்டும். அது ஓரளவிற்கு இந்த சிக்கலை குறைக்கும். 

பார்வை கோளாறுகள் வயோதிகத்தின் மற்றுமொரு மிக முக்கியமான நலக்குறைவு. கண்புரை போன்றவை வெகு சாதாரணம். நேத்ராமிர்தம் போன்ற மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தினால் ஓரளவிற்கு இது தடுக்கப்படும். அவ்வப்போது கண்ணுக்கு தர்ப்பண சிகிச்சை செய்து கொள்வது அவ்வகையில் மிக முக்கியமானது. திரிபலா சூரணம் தினமும் தேனுடன் உட்கொள்வது கண்ணுக்கு உகந்தது என்கிறது அஷ்டாங்க ஹ்ருதயம். 

மேலும் மிக முக்கியமான சிக்கல் என்பது மலம் சரிவர வெளியாகாமல் இருப்பது தான். மன அளவிலும் அவர்களுக்கு அது பெரும் எரிச்சலையும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது. மலமிளக்கி அதிக அளவு தொடர்ந்து பயன்படுத்துவது குடலின் இயல்பை கெடுத்து விடும். மேலும் அது பழகி விடுவதால் அதை காட்டிலும் அதிக செயல் திறன் கொண்ட மலமிளக்கி பயன்படுத்தினால் ஒழிய இது சரியாகாது. laxative abuse மிக முக்கியமான சிக்கல். நார்சத்து அதிகம் உட்கொள்வதன் மூலம் இதை ஓரளவு சரி செய்ய முடியும். மேலும் இது பழக்க தடத்தை விட்டு செல்லாது. விளக்கெண்ணெய் யோகங்கள் சிலவற்றை ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அவை உட்கொள்ள பயன்படுத்தலாம். திரிபலா சூரணம் கண்களுக்கு மட்டுமல்ல, மலமிளக்கியாகவும் செயலாற்றும் வல்லமை கொண்டது. 
- சுகி