காலம் வழிந்தோடி தீர்ந்து மறையும் தருணத்தில் நம் முன் வந்து நிற்பவன் தான் காலன். வாழ்வின் அத்தனை மகத்துவங்களும் ஒரு நாள் முடிவுர வேண்டும். அறிய முடியாத வாழ்வின் அடுத்த பக்கமாக வரும் மரணத்தை மனிதன் என்றேனும் வாசித்து தான் ஆக வேண்டும், இயற்கையுடன் போரிட்டு மரணத்தை வெல்வதல்ல ஆயுர்வேதத்தின் நோக்கம். வாழும் காலத்தில் வீடுபேறு நோக்கி முன்னகர்ந்து ஆன்மாவின் அழியா தன்மையை உணர்ந்து அறிவதே அதன் நோக்கம். தர்ம அர்த்த காம மோக்ஷம் எனும் நான்கு புருஷார்தங்களை அடைவதற்கு ஆரோக்கியம் அவசியம் என்கிறார் சரகர்.அதற்கு தேவையான ஆரோக்கியத்தை பேணும் வழிமுறைகளை சொல்வதே ஆயுர்வேதத்தின் நோக்கம் என்கிறார். முதிர்ந்த வயதில் பலவீனமான உடலை உகுத்து வேறோர் உடலில் புகுந்து ஜனன மரண சுழலில் உழல்கிறது நம் ஆன்மா என்கிறது கீதை. பசி, நீர் வேட்கை, தூக்கம், வயோதிகம் ஆகியவை மனிதன் தவிர்க்க முடியாத பிணி என்கிறது ஆயுர்வேதம்.
வயோதிகத்தையும் அதனால் ஏற்படும் மாற்றங்களையும் எதிர்மறையாக அணுகி எதிர்த்து போராடுவதை விடுத்து, மாற்றங்களை இயல்பாக ஏற்றுக்கொண்டு முன்னகர்வதே சிறந்த வழியாகும். இயன்றவரை வயோதிகத்திலும் புலனுருப்புகளையும் உடலுருப்புகளையும் கூர்மையாக, திடகாத்திரமாக பேணுவதே நமது லட்சியமாக இருக்க வேண்டும். உரிய நேரத்தில் பஞ்ச பூதங்களின் சேர்க்கையில் ஆன இவ்வுடல் மீண்டும் பஞ்ச மகா பூதங்களாக பிரிந்து பிரபஞ்ச வெளியில் இணைந்துகொள்ளும் காலம் வரும் போது அவதியின்றி அமைதியாக, நாம் பல வருடங்கள் வாழ்ந்து கழித்த வீட்டை பற்றிய சுகமான நினைவுகளுடன் அதைக் காட்டிலும் பிரம்மாண்டமான வீட்டிற்கு குடி புகுவது போல் மரணத்தை அரவணைப்பது தான் ஆயுர்வேதத்தின் வழிமுறை.
மனிதனின் வாழ்நாளை பால்ய/இளமை பருவம், மத்திய வயது, வயோதிகம் என்று மூன்றாக பகுத்தோம் என்றால், இளமையில் நீரும் நிலமும் இணைந்த , சௌமிய குணங்களும், போஷாக்கும் நிறைந்த கப தோஷம் பிரதானமாக இருக்கிறது. அதற்கு பின்னர் மத்திய பர்வத்தில் அக்னியின் அம்சம் ஓங்கி பித்த தோஷம் முக்கியத்துவம் பெறுகிறது. வயோதிகத்தில், நீரம்சம் குறைந்து, உடல் வற்றி வறண்டு வாதம் வலு பெற்று நிலை பெறும் என்கிறது. உடலை சௌமிய ஆக்னேய குணங்களின் கூட்டு என்று கூறுகிறது ஆயுர்வேதம். சோமன் எனும் சொல்லில் இருந்து சௌமியம் உருவாகிறது, சோமன் சந்திரன். பிறை சந்திரனை சூடிய ஈசனை நாம் சோம சேகரன் என்றழைக்கிறோம். ஆக்னேயம், அக்னியின் வடிவம். சூரியன். வளர்ச்சி ஆரோகியத்திற்கு சௌமிய குணங்கள் மேலோங்கி இருக்க வேண்டும், ஆக்னேய குணங்கள் அளவோடு இருக்க வேண்டும். சிகிச்சைகள் அனைத்தும் உடலில் சௌமிய குணங்களை மீட்கவே அளிக்கப் படுகின்றன. சூரிய – சந்திர எனும் இருவகை சக்திகளின் கூட்டில் உருவாகும் இவ்வுடலை சீனத்தின் யின் யாங் வடிவத்தில் குறிக்கிறார்கள். எதிரெதிர் குணங்கள் சமநிலையில் ஒன்றையொன்று நிரப்பி ஆரோகியத்தை நிலை நிறுத்துகிறது.
கப காலமான இளமை முடிந்து பித்த காலமான மத்திய வயது தொடங்குவது முதல் சௌமிய குணங்கள் உடலில் குறைந்து ஆக்னேய குணங்கள் வலுவடையத் தொடங்குகின்றன. ஆகவே முதுமைக்கான தயாரிப்பு மத்திய வயதில் இருந்தே தொடங்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். அறுபது வயதிற்கு மேல் பெரும்பாலான பஞ்ச கர்ம சிகிச்சைகளுக்கு முதியவர்கள் அருகதையற்றவர்கள் என்கிறது ஆயுர்வேதம். ஆக முதுமைக்கான தயாரிப்பு 30 முதல் 50 வரையிலான காலக்கட்டங்களில் தொடங்க வேண்டும்.
முதுமை பருவத்தை ஜரா என்கிறது ஆயுர்வேதம். ஜரணம் எனும் வேர்ச்சொல்லில் இருந்து உருவாவதே ஜரா. ஜீரணம் என்பதும் இதே வேர்சொல்லில் உருவாவதுதான். அக்னியின் இயல்பால் உணவு செரிப்பது போல், அக்னி இவ்வுடலையே அரித்து செரிக்கிறது. எத்தனை மகத்தான புரிதல்! ஆயுர்வேதத்தின் எட்டு அங்கங்களில் ஒன்றான ரசாயான சிகிச்சையை பற்றி எழுதும் போது ஆயுர்வேத ஆசான்கள் – ஜரா வியாதி வித்வம்சி என்று எழுதுகிறார்கள். அதவாது முதுமை எனும் நோயை தடுக்கும் அல்லது முதுமை காலத்து நோய்களை தடுக்கும் என்று இருவேறு முறைகளில் இதை பொருள் கொள்ளலாம். ரசாயனம் எனும் பதத்தை நவீன வேதியலுடன் தொடர்பு படுத்தக் கூடாது. ஆயுர்வேதத்தில் ரசாயனத்திற்கு வேறு பொருள் இருக்கிறது. நாம் அனைவரும் அறிந்த மிகப் பிரபலமான ரசாயன மருந்தை சொல்லட்டுமா? சியவனப்ராஷம்..
-சுகி