Monday, 17 July 2017

விருது அறிமுக உரை

(ஜூலை 15 2017 அன்று நிறைவடைந்த விருதுவிழாவில் வாசிக்கப்பட்ட விருது அறிமுக உரை.)

அரிமளம் வைத்தியர் என்று அறியப்படும் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவரது தந்தையிடமிருந்து குருமுகமாக மிக இளம் வயதிலேயே சித்த மருத்துவத்தை பயின்றவர். இப்பகுதி என்றில்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாடுகளில் இருந்தும் அவரைக் காண நோயுற்றவர்கள் வருவதுண்டு. நிதானமான பேச்சும், எளிமையும், குறைந்த செலவும் அரிமளம் வைத்தியரின் முக்கிய பண்பாக கருதப்படுகிறது. அவ்வகையில் அவருடைய பங்களிப்பை நினைவுகூறும் வகையில் அவர் பெயரில் இந்திய மருத்துவ வளர்ச்சிக்கு பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு ஒரு வாழ்நாள் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஒரு  விருது அளிக்க வேண்டும் எனும் யோசனை உதித்தது. விருது தொகை பெரிதில்லை என்றாலும் ஒரு சிறிய ஊக்கத்தை அளிக்கும், நாளடைவில் இத்தொகை இதற்கென உருவாக்கப்படும் வைப்பு நிதியிலிருந்து வளரக்கூடும்.

நவீன காலகட்டத்தில் இந்திய மருத்துவ முறைகளின் மிக முக்கியமான சவால் என்பது அறிவியலுடன் அதுகொள்ளும் உறவே. அனுபவபூர்வமாக நிறுவினால் போதாது, அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டிய நிர்பந்தம் நமக்கிருக்கிறது. அறிவியல் அழுத்தம் சரிவர எதிர்கொள்ளப்படவில்லை என்றால் நாம் நாளடைவில் பாரம்பரிய இந்திய மருத்துவத்தை முற்றிலுமாக இழந்துவிடக்கூடும். அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்ட பகுதிகள் நவீன மருத்துவத்தின் ஒரு பகுதியாக உள்வாங்கிகொள்ளப்படும்.

இந்திய மருத்துவத்துறை மருத்துவர்களிடம் சில வினோதமான முரண்பாடுகளை நாம் காண முடிகிறது. ஒருபுறம் எங்கள் மருத்துவத்துறை மிகவும் தொன்மையானது, மிகவும் உயர்ந்தது என்று பேசிக்கொண்டே மறுபுறம் நவீன மருத்துவம் புரிவதற்கான உரிமைகளுக்காக குரல் கொடுப்பது. இருவிதமான நம்பிக்கை சிறைகளில் நாம் அடைப்பட்டு இருக்கிறோம். நவீன மருத்துவம் கேடானது, பாரம்பரிய மருத்துவம் உயர்வானது என்பது ஒருநிலை நவீன மருத்துவம் உயர்ந்தது பாரம்பரிய மருத்துவம் வெறும் மூட நம்பிக்கைகளின் தொகை. நமது இறுகிய நம்பிக்கைகள் நம்மை உண்மைக்கு அருகே அழைத்து செல்வதில்லை. நமக்கு வசதியான வெளியை விட்டு வெளியே வந்து ஆய்ந்து நோக்குவதற்கு நாம் தயாராக இல்லை.

இந்நிலையில் இந்த விருது இந்த எல்லையை உணர்ந்து தமது எல்லைகளை விஸ்தரிக்க முயலும் நவயுக இந்திய மருத்துவர்களுக்கானது. அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எங்களது முதன்மை நோக்கம். காழ்ப்பும் பற்றும் இன்றி துறை அறிவுடன் இரண்டு மருத்துவ துறைகளையும் ஒருங்கே நோக்கும் மருத்துவர்களை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். இவ்விருதுக்கான இந்த அளவுகோலின் படி நாங்கள் பரிசீலித்த நான்கைந்து பெயர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் டாக்டர்.திரு நாராயணன்.  தொடர்ந்து அறிவியல் பூர்வமான சித்த மருத்துவத்தை அவருடைய ctmr அமைப்பு மூலம் முன்னெடுத்து வருகிறார். பாட திட்டங்களை வடிவமைப்பது, ஆய்வு முன்வடிவை வரையறுப்பது, பண்டைய மருத்துவ ஆவணங்களை காப்பது, நவீன வாழ்வின் தேவைகளுக்கு ஏற்ப சித்த மருத்துவ புத்தகங்களை பதிப்பிப்பது என்று பல தளங்களில் தொடர்ந்து பங்களிப்பு ஆற்றி வருகிறார்.

‘இந்திய மருத்துவத்திற்கான வாழ்நாள் பங்களிப்புக்கான’ அரிமளம் ராமகிருஷ்ண வைத்தியர் விருதை நாங்கள் அவருக்கு அளிப்பதன் மூலம் இவ்விருது பெருமை கொள்கிறது.