ஆயுர்வேத பஞ்சகர்மா என்பது உடலிலிருந்தும் மனதிலிருந்தும் நச்சுக்களை வெளியேற்றி, அவற்றுக்கு புத்துயிர் அளிக்க உதவும் சுத்திகரிப்பு சிகிச்சை முறைகளாகும். ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சை என்பது ஐந்து சிகிச்சை முறைகளை உள்ளடக்கியது. அவை உடலில் சேர்ந்த நச்சுக்களை சுத்தப்படுத்த உதவுகின்றன. மேலும் அவை ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. வமனம், விரேசனம், வஸ்தி, நஸ்யம், ரக்தமோக்ஷணம் ஆகியவை தான் பஞ்ச கர்மா சிகிச்சைகள் ஆகும்.
அதற்கான வழிமுறைகள் என்ன?
பஞ்சகர்ம சிகிச்சையும் 3 முக்கிய அங்கங்களை கொண்டது. அவை பூர்வ கர்மம் (தயார் படுத்தும் சிகிச்சைமுறை), பிரதான கர்மம் (முதன்மை சிகிச்சை முறை) மற்றும் பஸ்சாத் கர்மா (முக்கிய சிகிச்சைக்கு பிந்தைய சிகிச்சை முறை).
பூர்வ கர்மா
பூர்வ கர்ம என்பது பஞ்சகர்மா சிகிச்சைகளின் முதல் படியாகும், இது பிரதான கர்மாவிற்கு உடலை தயார்படுத்துகிறது. மருத்துவ ஆலோசனை, பரிசோதித்தல், உணவுமுறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், ஆயுர்வேத மருந்துகள் ஆகியவற்றுடன் பூர்வ கர்மம் தொடங்குகிறது. சிநேகனம் (எண்ணெய் தேய்ப்பு & நெய் மருந்துகளை உட்கொள்ளல்) ஸ்வேதனம் (வியர்வை தருவிக்கும் சிகிச்சை) ஆகியவற்றுடன் தொடங்குகிறது.
இந்த சிகிச்சைகள் உடலில் இருந்து ஆமத்தையும் நச்சுக்களையும் அகற்ற உதவுவதுடன் அவற்றை செரிமான மண்டலத்திற்கு நகர்த்துகிறது.
பிரதான கர்மா
பிரதான கர்மம் என்பது பஞ்சகர்மா சிகிச்சைகளில் இரண்டாவதும் முக்கியமானதுமான படிநிலையாகும். வமனம் (வாந்தி), விரேச்சனம் (குடல் சுத்திகரிப்பு), வஸ்தி (எனிமா), நஸ்யம் (நாசி மருந்து) மற்றும் ரக்தமோக்ஷணம் (இரத்த வெளியேற்றம்) போன்ற சிகிச்சைகளைப் பயன்படுத்தி உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சிகிச்சைகள் தனிநபரின் பிரகிருதி, தோஷம் (வாதம், பித்தம், கபம்) மற்றும் தூஷ்யம் (ஏழு தாதுக்கள் மற்றும் மூன்று மலங்கள்) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
பஷ்சாத் கர்மா
பஷ்சாத் கர்மா என்பது பஞ்சகர்ம செயல்முறையின் மூன்றாவது படிநிலையாகும், இது நச்சு நீக்கத்திற்குப் பிறகு உடலை குணப்படுத்தவும் மீட்டெடுக்கவும் உதவுகிறது. புத்துயிர்ப்பு சிகிச்சைமுறை என்று அழைக்கப்படுகிறது. ஆரோக்கிய வாழ்வுக்கான உணவு, வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற அறிவுறுத்துகிறது.